விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் முதல் சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரை 55 கிமீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிந்ததாக அறிவித்து கொத்தட்டையில் அமைந்துள்ள டோல்கேட்டில் வருகின்ற டிச 23 முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையொட்டி பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை பணிகள் முழுவதும் முடிவடைந்த உடன் டோல்கேட் திறந்திடவும்.; தனியார் பேருந்துகளுக்கு அறிவித்துள்ள அதிக கட்டணத்தையும், லாரிகளுக்கு போட்டுள்ள கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தியும்; உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் பாஸ் வழங்கிடவும்; அறிவிக்கப்பட்ட கட்டணம் கூடுதலாக இருப்பதால் கட்டணத்தை குறைத்து அறிவித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டிச 21 அன்று டோல்கேட் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கொத்தட்டை டோல்கேட் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு தலைமையில் சுற்றுவட்டார கிராம தலைவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்றனர்.
டோல்கேட் நிர்வாகத்தினர் 2 நாள் அவகாசம் கேட்டதின் அடிப்படையில் கொத்தட்டை டோல்கேட் முற்றுகை போராட்டம் ஆனது 3 நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் டிச 23-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சிகள்,உள்ளாட்சி கிராமத் தலைவர்கள் மற்றும் இயக்க அமைப்புகள், லாரி ஓட்டுநர் உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம்,சுற்று வட்டார கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் ஜமாத்துகள், விவசாய சங்கங்கள், சி ஐ டி தொழிற்சங்கம், நான்கு சக்கர வாகன சங்கங்கள் ,தனியார் பேருந்து சங்கம் அனைவரையும் ஒன்று திரட்டி கொத்தட்டை டோல்கேட் முற்றுகையிடுவதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் முட்லூர் ஜவுளிக்கடை பிகேஐ திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் தெரிவித்துள்ளனர்.