இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இத்தகைய சூழலில் தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “ சில போட்டித் தேர்வுகள் குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் முதுகலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 23, 2024 அன்று நடைபெறவிருந்த நீட் முதுகலை நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சகம் மனப்பூர்வமாக வருந்துகிறது. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வுச் செயல்முறையின் உண்மைத் தன்மையை பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இது திடீரென நடக்கும் நிகழ்வல்ல. மத்திய தேர்வு முகமையின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி. மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மருத்துவம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளில் நேர்மையான, சமமான தேர்வு முறையை கொண்டுவர வேண்டும். தொழில்முறை தேர்வுமுறையில் பள்ளிக்கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். உயர்கல்வி தேர்வுமுறையில் மாநில உரிமைகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.