திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பெண் என்ஜினீயர். 23 வயதாய அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகாரில், நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். நானும், அத்திக்கோம்பையை சேர்ந்த ஒருவரும் காதலித்தோம். எனது காதலர் அவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி என்னை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் நாங்கள் சென்னையில் வசித்தோம.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் சென்னைக்கு வந்து எங்கள் 2 பேரையும் அடித்து உதைத்தனர். பின்னர் எங்களை காரில் அத்திக்கோம்பைக்கு கடத்தி வந்தனர். அங்கு ஒரு வீட்டில் வைத்து என்னை தாக்கினர். அங்கிருந்து எனது கணவரை பிரித்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
எங்களை கடத்தி வந்தது, என்னை தாக்கியது குறித்து எனது தாயார் ஒட்டன்சத்திரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் எனது கணவரின் குடும்பத்தினரை அழைத்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது நான் வேறு ஒருவருடன் ஆபாசமாக இருப்பதாக கூறி ஒரு வீடியோவை அவர்கள் காண்பித்தனர். அதுபற்றி விசாரணை நடத்தும்படி போலீசில் கூறினேன். ஆனால், போலீசார் விசாரணை நடத்தவில்லை. இந்த நிலையில் எனது கணவருக்கு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து நான் கேட்டபோது, கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
மேலும் போலீசாரிடம் காண்பித்த ஆபாச வீடியோவை முகநூல், வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து விடுவதாகவும் கணவரின் பெற்றோர் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.