திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,100 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் நீர்வரத்தால் பூண்டி ஏரியின் மொத்த உயரமான 35 அடியில் நீர்மட்டம் 33.7 அடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியது. மதுராந்தகம் ஏரிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி மற்றும் மதுராந்தகம் ஏரியை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.