கெட்டுப்போன இறைச்சிகளை அனுப்பிவைத்ததாக சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைக்கு சொந்தமான உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, ''இங்கிருந்த கறியை நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். அவை கெட்டுப் போய் உள்ளது.இத்தனைக்கும் இறைச்சியை கொண்டுவந்தது ஃப்ரீசர் என்று சொல்கிறார்கள். ஆனால் இறைச்சி அழுகிப்போய் இருந்தது. கெட்டுப்போன கறியைத்தான் சோமோட்டோகாரங்கதான் சப்ளை செய்திருப்பார்கள் போலிருக்கு. இந்த இறைச்சிகள் அனைத்தையும் கைப்பற்றி விட்டோம். இதனை ஆய்வுக்காக லேப்புக்கு அனுப்புவோம். அதேபோல் வெட்னரி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி இது என்ன கறி, அழுகிய கறியா என ஆய்வு செய்யவுள்ளோம்'' என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், யார் இந்த புகாரை அளித்தது, சோமாட்டோ நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரி,''கெட்டுப்போன கறியை கொடுப்பதாகவும் இதனால் நாங்கள் பாதியில் நிறுத்திவிட்டோம் எனவும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடையின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதற்கு சோமாட்டோகாரங்கதான் பதில் சொல்லணும். இது ஆரம்பம்தான். இன்னும் தீவிரமாக விசாரிக்கப்போறோம். இறைச்சி வாங்கப்பட்ட கடைகளின் பில்களை ஆய்வு செய்து வருகிறோம்.கர்நாடகா மாண்டியாவில் உள்ள இறைச்சி கூடங்களையும், நிறுவனங்களையும் ஆய்வுக்கு உட்படுத்துவோம்.தற்பொழுது கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்துள்ளோம். இது என்ன இறைச்சி என்பது ஆய்வுக்கு பிறகே தெரியவரும்'' என்றார்.