திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் தற்பொழுது ரத்து செய்துள்ளது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்பொழுது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பொன்முடியின் மனைவி வருமானத்தை பொன்மூடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டிருக்கிறார்கள். அவருடைய மனைவிக்கு சொந்தமாக தனியார் விவசாய நிலங்கள் உள்ளது. அதன் மூலமாகவும் வருமானம் இருக்கிறது. இதை கருத்தில் கொள்ளாமல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைச் சரியாக புரிந்து கொண்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது என வாதங்கள் வைக்கப்பட்டது.
இது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் பிறப்பித்திருக்கக்கூடிய உத்தரவில் 'வருமான வரி கணக்கு, வங்கி கணக்கு, சொத்து கணக்குகளை கொண்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த உத்தரவு தவறானது. செல்லாதது என ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.