தை திருநாள் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் பொங்கல் வைக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தமிழகம் முழுக்க வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 4ந் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்களும் அவர்கள் சார்ந்த ஊர்களில் இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
ஈரோட்டில் கருப்பணன் வீதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கும் பணியை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பொங்கல் பண்டிகையை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதலமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அது இன்று தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர்களின் ரேஷன் கார்டு, 1,381 என 7 லட்சத்து, 41 ஆயிரத்து, 153 கார்டுதாரர்களுக்கு, 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு 1,159 ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. இத்துடன் இலவச வேட்டி சேலைகளும் வழங்கப்படுகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூபாய் 7 கோடியே 2 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேபிள் டிவி வாரிய தலைவர் குறிஞ்சி என். சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி சேலையும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் மக்கள் சென்றனர்.