Skip to main content

பொங்கல் பரிசுத் தொகுப்பு; டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்!

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Pongal gift set The Token Issue Begins
கோப்புப்படம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2 ஆம் தேதி (02.01.2024) தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5 ஆம் தேதி (05.01.2024) பரிசுத் தொகுப்புடன் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் வகையில், இன்று (07.01.2024) முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. அந்த வகையில் இன்று முதல் வரும் 13 ஆம் தேதி (13.1.2024) வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் 14 ஆம் தேதி (14.1.2024) வழங்கிடவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பொங்கல் பரிசினைப் பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படவுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பணிகளின் போது நியாய விலைக் கடை பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்