சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (11/01/2022) மாலை 05.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது, "பொங்கல் பரிசுத்தொகுப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டே கொள்முதல் நடைபெற்றது. அ.தி.மு.க. ஆட்சி முழுவதும் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என ஊழலில் திளைத்தது.
பொங்கல் பரிசு வழங்குவதில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஊழல் நிறைந்திருந்தது. ஆளும் அரசை குறைக்கூறும் நோக்கத்திலேயே ஓ.பி.எஸ். தவறான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். 2011- ஆம் ஆண்டு வரை வழங்கி வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. அரசு நிறுத்தியது. கடுமையான நிதி நெருக்கடியிலும் கூட கரோனா நிவாரண நிதியையும், நிவாரண பொருட்களையும் தி.மு.க. அரசு வழங்கியது. தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் பரிசைப் பெற்ற அனைவரும் தரமானதாக உள்ளதாக பாராட்டுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பிற்காகக் கூடுதல் விலை கொடுத்து பொருட்கள் வாங்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குற்றஞ்சாட்டிய நிலையில், திமுக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.