Skip to main content

பொங்கல் பண்டிகை; சொந்த ஊர்களுக்குப் பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு!

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Pongal festival; Attention passengers going to their hometowns by bus

பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் 4 ஆயிரத்து 706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே சமயம் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்ல 8 ஆயிரத்து 478 சிறப்புப் பேருந்துகள் என அடுத்த 3 நாட்களுக்கு 13,184 சிறப்புப் பேருந்து என மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இன்று (12.01.2023) முதல் வரும் 14 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் (SETC) மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் சென்று பயணிக்க வேண்டும். முன்னதாக கோயம்பேட்டில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த பேருந்துகள் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (TNSTC) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், முன்பதிவு செய்யாத பயணிகளும், விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்பவர்களும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் வழியாக NH45 தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும். கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. மேலும், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) வழியாக  நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படுகின்றன. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம் செல்லும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் (SETC) இயக்கப்படும்.


கோயம்பேடு பேருந்து நிலையம்:

திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி (வழி:திண்டிவனம்), பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாசலம், திட்டக்குடி, செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழக (TNSTC) பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக திருப்பதி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கலைஞர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக (ECR) புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தத்திலிருந்து பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர், ஆரணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்