தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு கல்விக்கூடங்கள், நீதிமன்றங்களில் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. நெகிழி புகையில்லா போகி கொண்டாட பள்ளி மாணவர்கள் உறிதியேற்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழாவை பள்ளி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாக கொண்டாடினர்.
பள்ளி மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை உடுத்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் உழவர்களை போற்றும் விதமாகவும், விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மாணவர்கள் உழவு கருவிகளான ஏர் கலப்பை, மண்வெட்டி, அரிவாள் உள்ளிடவைகளை எடுத்து கொண்டும், மாணவிகள் பொங்கல் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி , மஞ்சள் கொத்து, பழவகைகளுடன் சீர்வரிசையாக து பள்ளிக்கு எடுத்து வந்தனர். பின்னர் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும், புகையில்லா போகி கொண்டாட வேண்டும், விவசாயத்தை காப்பற்ற வேண்டும் என்று உறுதி மொழி எடுத்தனர். சூரியனுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து படையலிட்டனர். மேலும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பறைசாற்றும் வகையில், கும்மியடித்தும், கபடி விளையாடியும், திம்பி சுற்றியும் மகிழ்ந்தனர்.
இதேபோல் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் வேட்டி சட்டை அணிந்தும், மாணவிகள் பாரம்பரிய புடவை அணிந்தும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
நீதிமன்றத்தில் ஆண் பெண் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் மண் பானையில் பொங்கல் வைத்து, பால் பொங்கியதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.