
புள்ளாண்விடுதி கிராமத்தில் காலங்காலமாக 9 இன மக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனைத்து இடங்களிலும் மக்களிடம் உள்ள இன வேற்றுமைகளை மறக்கடிக்க சமத்துவ பொங்கல் வைக்க உத்தரவிட்டு சமத்துவப் பொங்கல் விழாக்களையும் நடத்தி வருகிறது.

ஆனால் அரசு அறிவிப்பிற்கு முன்பு பல நூறாண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி கிராமத்தில் உள்ள அனைத்து இனத்தவர்களம் அதாவது 9 இனத்தவர்களும் இணைந்து ஒரே இடத்தில் பொங்கல் வைத்து ஒரே இலையில் படையல் வைத்து வழிபட்டு வருகின்றனர். இது தான் இயற்கையாக தோன்றிய சமத்துவப் பொங்கல் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஓவ்வொரு பகுதி மக்களும் புள்ளாண்விடுதி அரசு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலுக்கு பொங்கல் பானை, விறகு உள்பட அனைத்தையும் கொண்டு வந்து கிராமத்தின் சார்பில் வைக்கப்படும் பொங்கல் பானையை வைத்தவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் பொங்கல் பானைக்கு தீ மூட்டுகின்றனர். தொடர்ந்து அனைத்து இனத்தவர்களும் படையலுக்கு முன்பு அர்ச்சனை செய்த பிறகு ஒவ்வொரு பானையில் இருந்தும் பொங்கல் எடுக்கப்பட்டு பெரிய இலையில் படையலிட்டு அனைவருக்குவம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் மேலதாளங்களுடன் ஊர்வலமாக கமலாயி அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளையும் செய்து களைந்து செல்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது.. புள்ளாண்விடுதி கிராமத்தில் அனைத்இனத்தவர்களும் ஒற்றுமையாக வசிக்கிறோம். சுமார் ஆயிரத்தி 500 குடும்பங்கள் உள்ளனர். அதே ஒற்றுமை அனைத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து மாடுகளை அவிழ்த்துவிடுவது வழக்கமாக கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்த தலைமுறையான நாங்களும் அதை பின்பற்றி வருகிறோம். இதனால் உண்மையான சமத்துவத்தை உணர்கிறோம். அதனால் தான் சமத்துவ விருதும் இந்த ஊராட்சிக்கு கிடைத்தது. இந்த சமத்துவ பொங்கல் முறை என்பது இனியும் தொடரும். பாகுபாடின்றி நடத்தப்படும் என்றனர்.