பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலாக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 நியாயவிலை அட்டைத்தாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க 258 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது.
பொங்கல் தொகுப்போடு, ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசுத் தொகை வழங்க வகை செய்வதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமை முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை, தொடங்கி வைப்பதன் அடையாளமாக, நாளை மாலை நடைபெறும் நிகழ்வில், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை, 10 பேருக்கு வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.