காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கோ.ரா. ரவி. இவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தியிடம் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாயை திரும்ப வழங்கினார். இதுத்தொடர்பாக நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியில், பாலாற்று விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் நீர் வளத்தைக் காக்க பல வருடமாக பாலாற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்ட பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த அரசு சார்பிலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கடந்த முறை பெய்த பெரிய மழை சுமார் 39 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் வீணாகக் கடலில் கடந்தது. அரசு நிதி ஒதுக்கி தடுப்பணை கட்டி இருந்தால் தற்போது எதிர்கொள்ளப்படும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டிருக்காது. மாறாக அரசு பொங்கல் சிறப்பு பரிசு என்ற பெயரில் பல நூறு கோடியை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆகவே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பணத்தையும், பரிசு பொருட்களையும் நான் அரசிடமே திரும்ப ஒப்படைத்துவிட்டேன்.