தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவிற்கான மின்சார இணைப்புகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜாபுயல் தாக்குதலால் வயல் வெளியில் குடியிருப்புக்கு பின்புறமாக சென்ற மின்கம்பங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எல்லா கிராமங்களுக்கும் போல தங்கள் கிராமத்திற்கும் மின் இணைப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயக் குடும்பங்கள் குழந்தைகளுடன் இருளில் வாழ்ந்து வரும் கொடுமை தொடர்கிறது.
இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், மின்துறை மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்சார துறை, காவல்துறையினர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. வருவாய் துறை மூலம் நில அளவை செய்து சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய சாலையில் மின்கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுக்க தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் உத்திரவிட்டதை தொடர்ந்து மின்சாரம் வரும் என்றிருந்தனர் பயனில்லை.
சிறப்பு அனுமதி வழங்கி கம்பங்கள் நடப்பட்டு பணிகள் துவங்கிய நிலையில் மின் இணைப்பு மட்டும் வழங்காமல் ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி இயற்கை சீற்றங்கள் ஏற்ப்படும் நிலையில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி தவிக்கும் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தஞ்சை வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்று பெண்கள், குழந்தைகள் என விவசாயிகள் 200 பேர் கைதானார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை.
தீபாவளி நெருங்கி வரும் வேலையில் உடன் மின் இணைப்பு வழங்கி விவசாயக் குடும்பங்களை பாதுகாத்திட அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று சென்னை மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இருளில் தவிக்கும் கிராம மக்களுக்கு உடனடியாக மின்சாரம் வழக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை. மனித உரிமையை மீறி அதிகாரிகள் செயல்படுவதால் தான் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுடன் சென்று புகார் அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள ஆணையம் உறுதி அளித்துள்ளது என்றார் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன். இவர்களுடன் மூத்த வழக்கறிஞர் அ.மார்க்ஸ், வழக்கறிஞர் ராமராஜ், மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.