நாகா்கோவில் பார்வதிபுரத்தில் வசிக்கும் எழுத்தாளா் ஜெயமோகன் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் திமுக பிரமுகா் செல்வத்தின் கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். பின்னர் அந்த தோசை மாவு புளித்து இருப்பதாக கூறி அந்த மாவை திரும்ப கொண்டு கடையில் விற்பனை செய்து கொண்டியிருந்த செல்வத்தின் மனைவி கீதா மீது பெண் என்றும் பாராமல் அந்த மாவை தூக்கி எறிந்து இருக்கிறார். அதற்கு காரணம் கேட்ட கீதாவுக்கு முறையான பதில் கூறாமல் தகாத வார்த்தையில் பேசியிருக்கிறார்.
இதனால் செல்வத்துக்கும் ஜெயமோகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஜெயமோகனிடமிருந்து வெளிப்பட்ட எதிர்பாராத வார்த்தைகளால் அந்த பெண்ணும் மன உளைச்சலுக்கு ஆளாகி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் ஜெயமோகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் டிஸ்சார்ஜ் ஆனார்.
இந்த சம்பவம் குறித்து நாகா்கோவில் வா்த்தக சங்கத்தினா் கூறும்போது, போலிசாருக்கு முதல் எதிரியே வியாபாரிகள்தான். செல்வம் திமுக பிரமுகராக இருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் போலீசார் நடத்தும் சில அக்கிரமங்களை உடனே தட்டி கேட்பார். இது போலிசாருக்கு எரிச்சலாக இருந்து வந்தது. அந்த கோபத்தை இப்போது தீா்த்து விட்டனா்.
தோசை மாவை செல்வம் அரைத்து கொண்டு விற்கவில்லை. அவா் இன்னொரு குடிசை வியாபாரியிடம் இருந்து வாங்கி விற்கிறார். அது புளித்து இருக்கிறதா? அல்லது புளிக்காமல் இருக்கிறதா? என்று செல்வத்துக்கோ அவரது மனைவிக்கோ தெரியாது. வாங்கிய நுகா்வோர் முறைப்படி சொன்னால் அதை அவா் மாற்றியிருப்பார். அதை விட்டுட்டு திரைப்படத்தில் அடாவடி காட்டி நாட்டை திருத்துவது போல் ஜெயமோகன் நிஜத்தில் காட்டினால் அது எடுபடுமா?
பணத்தையும் ஆள் பலத்தையும் காட்டி உண்மை தன்மை தெரியாமல் வியாபாரி மீது வழக்கு தொடுத்த காவல்துறையையும் ஜெயமோகனையும் கண்டிக்கிறோம் என்றனா்.
இந்த நிலையில் புளித்த மாவு விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்ய கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.