Skip to main content

“தேசப்பற்று இல்லாத கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன்” - சரத்குமார் 

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

Sarathkumar said I strongly condemn unpatriotic comments

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி முடிவுகளை இந்தியா தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும், வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக, இந்தியா உடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து, அட்டாரி எல்லை மூடல் உள்ளிட்ட முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள  பாஜக உறுப்பினர் சரத்குமார், “காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு அண்மையில் அறிவித்ததை, பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

இந்தக் கடுமையான சூழலில் இந்திய அரசோடு இணைந்து நிற்க உலக நாடுகள் முன்வந்திருக்கும் சூழலில் நமது தேசத்தில் இருந்து கொண்டே பாகிஸ்தானுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் சிலரது பேச்சுகள் அனாவசியமான பிளவுகளைத் தூண்டவே வழிவகுக்கும். பாகிஸ்தான் செய்த ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாகப் பரவிய காணொளி பொய் என்று தமிழகத்தை சேர்ந்த உண்மை கண்டறியும் குழு ஏன் பதற்றமடைந்து விளக்கம் கொடுக்கிறது என்பது புரியாத புதிர்.

நாடு மொத்தமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முனைப்பாக இருக்கும் சமயத்தில், இங்கு பலரும் சிந்து நீரை நிறுத்தியது தவறானது, நோயாளிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவது கொடுமையானது, பிரதமர் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் தான் கொலைகள் நடந்தது என்றெல்லாம் கருத்து கூறி வருபவர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்பதை தான் காட்டுகிறது. இத்தகைய தேசப்பற்று இல்லாத கருத்துகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

சர்வதேச அரசியல் என்பது சாதாரண வாக்கு வங்கி நாடக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது. தேசியம் என்பதும் தேசத்தின் பாதுகாப்பு என்பதும் சாதாரண ஊடகப் பதிவு இடும் அரைகுறை அறிவுடைய நபர்களின் சிந்தனைக்கு எட்டாதது” எனத் தெரிவித்த்ள்ளார். 

சார்ந்த செய்திகள்