
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இளநிலை மின் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற உள்ள நிலையில், பணபலன் பெறுவதற்கான கோப்புகளை சரி பார்த்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மின் பொறியாளர் அலுவலக மேற்பார்வையாளர் செந்தில்குமார் என்பவரை அனுகியுள்ளார். அப்பொழுது, கோப்புகளை சரி பார்த்து அனுப்புவதற்கு ரூ.10,000 லஞ்சம் நிர்வாக மேற்பார்வையாளர் செந்தில்குமார் கேட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சக ஊழியரிடமே அதிகாரி என்ற மமதையில் லஞ்சம் கேட்பது என்பது அவமானகரமானது. இந்த துறை மட்டுமல்லாமல் பல துறைகளிலும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்ற சக ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை தருவதற்காக லஞ்சம் கேட்பதும் லஞ்சம் தரவில்லை என்றால் அந்த கோப்புகளில் கையெழுத்து போடாமல் இழுக்கடிப்பது என்பது பல துறைகளிலும் தொடர்கிறது பாதிக்கப்படுபவர்கள் இதுபோல் பாதிக்கப்படுபவர்கள் புகார் தந்து கைது செய்ய தொடங்கினால் பல உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.