" கண்மாய், குளங்கள் போன்ற நீர்சேகரங்களிலுள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றினாலே போதும் தண்ணீர் பஞ்சமே இருக்காது" என நீர்நிலைகளிலுள்ள ஆக்ரமிப்புக்களை அகற்ற அதிரடி நடவடிக்கை எடுங்கள் என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்திரவிட அதிரடியாக ஆக்ரமிப்புக்களையெல்லாம் அகற்றி வருகின்றது சிவகங்கை மாவட்ட நிர்வாகம்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி, " நீர் வழிப்பாதைகளை ஆக்ரமிப்பு செய்திருப்பதால் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க இயலாத நிலை உள்ளது. அதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. எனவே நீர் நிலைகளிலுள்ள ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்றுதல் வேண்டுமென" சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்து வைக்க, மதுரை மட்டுமல்லாது சுற்றியுள்ள மாவட்டங்களில் நீர் நிலை ஆக்ரமிப்புக்களை அகற்றத் தொடங்கியது ஆட்சியர் தலைமையிலான குழு.
இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனோ, " சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர்நீலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஊராட்சிகள் வாரியாக குழுக்கள் அமைத்து தீவிரமாக செயல்படுத்தப்படும்" என உத்தரவிட்டக் கையோடு ஆக்ரமிப்புக்களை அகற்ற களத்தில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, காரைக்குடி தாசில்தார் பாலாஜி தலைமையிலான குழுவோ, காரைக்குடி வவுசி சாலையிலுள்ள மணக்காட்டிக் கண்மாயிலுள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றியதோடு, கண்மாயினை தூர் வாரி பொதுமக்கள் பாராட்டினைப் பெற்றனர்.
இது இப்படியிருக்க, " கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கண்டனூர் சிலம்பா ஊருணியின் ஆக்ரமிப்புக்களை அகற்றிவிட்டு, அங்கிருந்த சாக்கோட்டை வட்டம் குளப் படி குரூப் புல எண் 59 குழந்தை வேலு என்பவரால் ஆக்ரமித்து செய்து கட்டப்பட்ட பிள்ளையார் கோவில், பாண்டிகோவில் மற்றும் சில பீடங்கள் உள்ளிட்டவை இடித்துத் தள்ளியிருக்கின்றது. ஆவேசமடைந்த பூசாரியோ, " பாண்டி அய்யா உங்களை சும்மா விடமாட்டாரு.!" என சாபம் விட, " இது என்னுடைய இடம் இல்லைன்னு பாண்டி அய்யாவே சொல்லிட்டாரு.." என கூறிவிட்டு ஊருணியின் ஆக்ரமிப்பை அகற்றிய பூரிப்போடு திரும்பியிருக்கின்றது தாசில்தார் பாலாஜி தலைமையிலான டீம்.