பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த புகாரில், பிரபல பரீனா என்ற சொகுசு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு கார் மற்றும் 610 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்தில் அடிக்கடி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக விழுப்புரம் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பரீனா என்ற சொகுசு பேருந்தில் மது கடத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாலையில், அந்த பேருந்தை மத்திய புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றதாகவும், அப்போது பல்லாவரம் பேருந்து நிலையத்தில்,அந்த சொகுசு பேருந்தில் இருந்து மதுபாட்டில்களை கார் ஒன்றுக்கு மாற்றுவது தெரிய வந்ததாகவும், பின்னர் அவர்களை மடக்கி பிடித்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சொகுசு பேருந்து, கார் மற்றும் 610 மதுபாட்டில்களை விழுப்புரம் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் பேருந்து ஓட்டுநர் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்மணி, கார் ஓட்டுநர் ரெட்டேரியை சேர்ந்த முகமது சாதிக் மற்றும் மதுபாட்டில்களின் உரிமையாளர் எண்ணூரை சேர்ந்த பர்வீன் ஆகிய மூவரையும் பிடித்து புனித தோமையார் மலை மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதே போல் கடந்த மாதம் 28 ஆம் தேதி மது கடத்தியதாக பரீனா என்ற மற்றொரு சொகுசு பேருந்து பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.