கோவை அருகே மளிகை கடைக்குள் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். கொலையை மறைக்க கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை அடுத்த கருமத்தம்பட்டி மயிலேரிபாளையம் பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் 50 என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தேவகி (45) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிள்ளைகள் சொந்த ஊரில் உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கடைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
அப்போது மளிகை கடைக்குள் பெண் ஒருவர் காது அறுபட்ட நிலையில் உடலில் பலத்த காயங்களுடன் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்றிரவு தேவகி கடைக்குள் படுத்து இருந்ததாகவும், கொள்ளையடிக்கும் நோக்கில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தேவகியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை திருடி சென்றதும் தெரியவந்தது. மர்ம நபர்கள் தாக்கியதில் தேவகி பலியாகிவிட்டார்.
இந்த கொலையை மறைக்க அவர்கள் கடைக்கு தீ வைத்து எரித்து விட்டு சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.