Skip to main content

பொள்ளாச்சி நாசகார கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை - ஆளும் கட்சி தலையீடுக்கு கண்டனம்: எஸ்.டி.பி.ஐ. 

Published on 12/03/2019 | Edited on 12/03/2019


 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 

பெண்களை சக்திப்படுத்துதல், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் விவாதங்களில் நிறைந்து நிற்கும் வேளையில், பொள்ளாச்சியில் ஏராளமான இளம்பெண்களை சமூக விரோத கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளது ஒரு நாசகார கும்பல்.
 

அதோடு பாதிக்கப்பட்ட பெண்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்முறைகளை அரங்கேற்றியும், வசதிபடைத்த பெண்களிடமிருந்து பணத்தையும் பறித்துள்ளது அந்த கும்பல்.
 

அந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் மீதான விசாரணையின் போதே 250க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்ட கொடூரம் வெளிவந்துள்ளது. எனினும் அந்த கும்பலில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரை காப்பாற்றும் நோக்கில் இந்த விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 

Pollachi


 

ஆகவே குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துவதோடு, இதில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என்பதையும் கண்டறிந்து அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்தியா உள்ளது என பல்வேறு தரப்பின் ஆய்வுகள், அறிக்கைகள் கூறும் நிலையில், பொள்ளாச்சி சம்பவம் மூலம் தமிழகமும் அத்தகையதொரு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உள்ளதை அறிய முடிகிறது.
 

பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால், குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் ஆளும் கட்சி பிரமுகர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது தமிழக முதல்வர் அந்த நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நேர்மையாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

பெண்களின் வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கும் இதுபோன்ற மிக மோசமான சூழல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சமுக வலைதளங்களே இத்தகைய குற்றங்கள் நடைபெற காரணம் என கூறப்படுவதால் காவல்துறை அதன் மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
 

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, ஒழுக்கம் மிகுந்த சூழலை உருவாக்க நாம் தவறினால் அது நமது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்பதை அரசும், பொது சமூகமும் உணர்ந்து பெண்களின் பாதுகாப்பை அனைத்து ரீதியிலும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்