பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. கட்சியின் பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தம், அவரது கூட்டாளிகள் பைக் பாபு, ஹேரென் பால் உள்ளிட்ட மூன்று பேரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மூன்று பேரும், கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் ஜனவரி 20-ஆம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கில் மேலும் இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மூன்று பேரைக் கைது செய்ததாகவும் சி.பி.ஐ.யின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளானந்ததை நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.