பொள்ளாச்சி சம்பவம் நாட்டையே ஆட்டிக் கொண்டிருக்க அரசியல் கட்சிகள் தொடங்கி கல்லூரி மாணவ, மாணவிகள் வரை ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த 4 பேர் தான் குற்றவாளிகள் என்று வழக்கை முடிக்க முனைப்புக் காட்டி வருகிறது அரசும், அரசு சார்ந்த காவல் அதிகாரிகளும். ஆனால் உண்மை குற்றவாளிகள் எத்தனை பேரோ அவர்கள் அத்தனை பேரையும் கைது செய்.. தண்டனை வாங்கிக் கொடு என்று நாளுக்கு நாள் முழக்கங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தான் தஞ்சையில் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. கொடூரன்களுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் அவர்களை காப்பாற்ற துடிக்கும் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். தொடந்து செய்தியாளர்களிடம் பேசினார் தமிழ்செல்வி..
பொள்ளாச்சி சம்பவத்தில் 4 பேரை மட்டுமே கைது செய்திருக்கிறார்கள். இன்னும் 16 பேர்கள் வரை கைது செய்யவில்லை. பொள்ளாச்சியில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தஞ்சாவூரில் தங்கி இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிகிறது. அவர்களை உடனே கைது செய்ய வேண்டும். ஒருவேலை கைது செய்யவில்லை என்றால் அவர்கள் பதுங்கியுள்ள இடம் எங்களுக்கு தெரியும் மாதர் சங்கம் அந்த வீட்டை முற்றுகையிடும். பாதிக்கப்பட்டது பெண்கள் என்றாலும் மாநில மகளிர் ஆணையம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. உடனே அந்த 250 பெண்களை சந்தித்து ஆறுதல் சொல்ல மகளிர் ஆணையம் செல்ல வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.
அதே போல தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அரசாங்கம் அவர்களை காப்பாற்றுவதால் அந்த குற்றச் செயல்கள் மீண்டும் தொடர்கிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
யார் தஞ்சாவூரில் தங்கி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு.. பார் நாகராஜன் என்பவன் தஞ்சையில் அவனது நண்பர் வீட்டில் தஞ்சமடைந்திருப்பதாக தெரிகிறது. அந்த பார் நாகராஜன் அமைச்சர் வேலுமணியுடன் செல்பி எடுத்திருக்கும் படங்களும் கூட சமூக வலைதளங்களில் வருகிறது என்றனர் கூடி இருந்த தோழர்கள்.