திருச்சி – திருவெறும்பூரில் வாகன சோதனை நடத்தியபோது, போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில், கீழே விழுந்து, தலையில் அடிபட்டு, உஷா என்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தார். இதன் காரணமாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் காமராஜ்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை வட்டாரங்களில் இருந்து ஆய்வாளர் காமராஜ் குறித்த பழைய விவகாரங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒன்று -
2002-இல் திருவாரூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக காமராஜ் பணியாற்றியபோது காவலர் ஒருவர் விடுமுறை கேட்கிறார். அதற்கு, அந்தக் காவலரை கெட்ட வார்த்தையால் கடுமையாகத் திட்டுகிறார். தன்னை அவமானப்படுத்தியதை தாங்கிக்கொள்ள முடியாத அந்தக் காவலர், துப்பாக்கியை எடுத்து காமராஜை சுடுகிறார். குண்டு தவறுதலாக வேறு ஒருவர் மீது பாய்கிறது. அதனால், அந்தக் காவலர் மனம் உடைந்து, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்கிறார். அந்தப் பாவம்தான் காமராஜை இப்போது துரத்துகிறது என, 15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை இப்போது விவரிக்கிறார்கள்.