தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனையைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், ம.ம.க. சார்பில் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. சார்பில் ஈஸ்வரன், திமுக சார்பில் டாக்டர் எழிலன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஜெகன்மூர்த்தி, சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, பாமக சார்பில் ஜி.கே. மணி, காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், "பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க வேண்டும். சி.டி. ஸ்கேனை அதிகம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய பாமகவின் ஜி.கே. மணி, "ஐந்து நாட்களுக்கு ஒரு நாள் மட்டும் அத்தியாவசியக் கடைகளைத் திறக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேனுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
"முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. "முழு தீவிர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்" என்று பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
"கிராமப்புறங்களில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
"ஊரடங்கை நீட்டிக்கும்போது ஏழை மக்களின் நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி தெரிவித்துள்ளார்.
"கிராமங்களில் 100 பேருக்கு ஒரு ஆசிரியரை நியமித்து கரோனா தடுப்புப் பணிகளைக் கண்காணித்திட வேண்டும்.கிராமங்களில் கரோனா தொற்றைத் தடுக்காவிட்டால் விவசாய உற்பத்திப் பாதிக்கப்படும். ஊரடங்கை நீட்டித்தாலும் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும்" என்று கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
"அத்தியாவசியக் கடைகளை மூடிவிட்டு வீடு வீடாகப் பொருட்களை விநியோகிக்கலாம்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று (22/05/2021) மாலைக்குள் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.