விபத்தில் படுகாயமடைந்த போலிஸ்காரருக்கு உடனடி சிகிச்சை அளித்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என உயிரிழந்த போலிஸ்காரரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட தெம்மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). புதுக்கோட்டை ஆயுதப்படையில் போலிஸ்காரராக உள்ளார். கடந்த மாதம் 26ந் தேதி தனது உறவினரான கனிமொழியை (24) புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணியில் சேருவதற்க்காக நாகை மாவட்டம் வாய்மேடு கிராமத்தில் இருந்து ஒரு காரில் அழைத்து வந்தபோது வடகாடு அரசு ஆரம்பசுகாதார நிலையம் செல்லும் பிரிவு சாலை அருகே எதிர்பாரதவிதமாக கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் பார்த்திபன், கனிமொழி, கனிமொழியின் தம்பி அஜீத்குமார் (17), கார் ஓட்டுநர் நாகரெத்தினம் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டதால் சக நண்பர்கள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் நினைவின்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பார்த்திபனுக்கு சிகிச்சைக்காண செலவு தொகையை செலுத்த அவரது குடும்பம் சிரமப்பட்டதால் சக போலிஸ் நண்பர்கள் பலர் இணைந்து சிகிச்சைக்காக பணம் செலுத்தினார்கள். ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி போலிஸ்காரர் பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
சம்பவம் குறித்து அவரது போலிஸ் நண்பர்கள் கூறும் போது.. விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முதலில் முதலுதவி சிகிச்சைம ட்டும் அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மேல் சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டதால் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனை சக போலிஸ் நண்பர்கள் வார்டு டாக்டர் இல்லாமல் இருப்பதை அறிந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 நாட்கள் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பார்த்திபன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுவி சிகிச்சையுடன் காலம் கடத்தாமல் மேல்சிகிச்சையும் அளித்திருந்தால் பார்த்திபன் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ என்று நினைக்கிறோம் என்றனர் வருத்தமாக. மேலும் கடந்த மாதம் ஒரு ஜல்லிக்கட்டில் ஒரு போலிசாருக்கு கழுத்தில் மாடு முட்டி படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று 4 மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக் கொண்டு சென்றோம் என்றனர்.