சமூக வலைத் தளமான வாட்ஸ்அப்பில் பரவும் அந்த காட்சி, பார்ப்பவர்களை மிரள வைக்கிறது. சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் டிராபிக் போலீஸ்காரர், திடீரென சாலையின் குறுக்கே சென்று ஒரு இருசக்கர வாகனத்தை மடக்கி பிடிக்கிறார். (ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடி இருந்த கொக்கு மாதிரி...) இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழ, பின்னர் அவரை கைத் தாங்கலாக அழைத்து வந்து போலீஸ் ஜீப்பில் ஏற்றி அனுப்பி வைக்கின்றனர்.
இதுபற்றி நாம் விசாரித்தபோது, சம்பவம் நடந்தது சென்னை தேனாம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட கே.பி.தாசன் சாலை சந்திப்பு. பாய்ந்து சென்று பிடித்தவர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பிடிபட்டவர் அக்யூஸ்ட் அல்ல. அவருக்கு கீழே வேலை பார்க்கும் போக்குவரத்து காவலர் தர்மன்.
சம்பவம் நடந்த அன்று (21-11-2018) பணியில் இருந்த போக்குவரத்து காவலர் தர்மன். தனக்கு மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விடுப்பு தரவில்லை. "எனது தாயின் நினைவேந்தல் நிகழ்ச்சி (காரியம்) நடத்த வேண்டி உள்ளது. அதற்கு நான் பணம் திரட்ட வேண்டும். உறவுக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ஆனால், இன்ஸ்பெக்டர் லீவு கொடுக்க மறுக்கிறார். இப்ப நான் என்ன செய்ய.?" இப்படி வாக்கி டாக்கியில் பேச. அது சிட்டி முழுக்க எதிரொலித்துவிட்டது. உடனடியாக வாக்கி டாக்கியை ஒப்படைத்துவிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு வருமாறு தருமனிடம் தகவல் சொல்லப்பட்டது.
மேலும், டி.சி மற்றும் ஜே.சி ஆகியோர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பிடித்து எகிரவே, கடுப்பான இன்ஸ்பெக்டர், பாய்ந்து சென்று தருமன் மடக்கிப் பிடித்திருக்கிறார். அதாவது, பணி நேரத்தில் தர்மன் போதையில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தவே. (போதையில் தான் இருந்திருக்கிறார்) இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது எல்லாம், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இப்போது வெளி வந்திருக்கிறது. இதுபற்றி தருமன் உடன் பணியாற்றும் மற்றொரு காவலரிடம் நாம் பேசினோம். "வழக்கமாக தர்மனுக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. ஆனால், அன்றைக்கு மதுபோதையில் இருந்தாரா? என தெரியவில்லை. ஆனால், இன்ஸ்பெக்டர் வந்து யாரையும் மரியாதையாகவே நடத்தமாட்டார்" என்றார்.
ஓடிச் சென்று பிடிக்கும்போது, அந்த வழியாக சென்ற சரக்குவேன் அருகே தர்மன் கீழே விழுந்தார். ஒரு அடி முன்னால் தள்ளி விழுந்திருந்தால், இந்நேரம் தர்மனுக்கு காரியம் நடந்திருக்கும். வழக்கமாக ஹெல்மட் போடாதவனைத் தான், இந்த மாதிரி விரட்டிப் பிடிப்பாங்க. ஆனால், ஒரு டிராபிக் போலீஸையே, இன்னொரு டிராபிக் போலீஸ் விரட்டிப் பிடித்த கொடுமையை எங்கே போய் சொல்வது?.. என்றார்.