வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சினேகா (25). இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம்(23.5.2024) இரவு அவரது வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்பொழுது நடுபேட்டை பாலாறு மருத்துவமனை அருகே சென்ற போது பைக்கில் வந்த மூன்று பேர் சினேகாவைப் பின் தொடர்ந்து வந்து செல்போன் மற்றும் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர். இது குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் நகர போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராய்ந்தனர். மேலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
இந்நிலையில் குடியாத்தம் அருகே கல்லூர் பேருந்து நிலையம் அருகில் ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது அவர்கள் செல்போன் மற்றும் செயின் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்தது
இதனையடுத்து குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இம்ரான்(20), ஹரி(19) மற்றும் 18 வயது நபர் ஆகிய மூன்று பேரை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழிப்பறி சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.