ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து வேலூர் மாவட்டம் திருவலம் வழியாக வந்த வாகனங்களை மடக்கி காவல்துறையினர் சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர். மகேந்திரா சைலோ காருக்கு பின்னால் வந்த லோடு மகேந்திரா ட்ரக் வண்டி திருப்பதி திருமலை தேவஸ்தானத்து வண்டிகளில் பயன்படுத்தும் பெயர் லோகோவோடு வந்தன. அந்த வண்டியின் பதிவு எண் தென்தமிழகத்தை சேர்ந்தது என்பதால் போலீஸார் ஓரம் கட்டச்சொல்லினர்.
அதனைப்பார்த்து சைலோ காரை தள்ளி நிறுத்திவிட்டு ஓட்டுநர் உட்பட இருவர் வண்டியை விட்டு இறங்கி ஓடினார்களாம். காரில் முன்பக்கமும், பின்பக்கமும் பிரஸ் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. சென்னை பதிவு எண் கொண்ட அந்த காரை நிறுத்தியதும் காரில் இருந்தவர்கள் ஓடியதை பார்த்து போலீஸார் அவர்களை துரத்த, பின்னால் வந்த லோடு வண்டியிஸ் இருந்தவர்களும் வண்டியை விட்டு இறங்கி ஓடிவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.
இரண்டு வண்டிகளில் இருந்து எதற்காக இறங்கி ஓடுகிறார்கள் என போலீஸார் சந்தேகமடைந்து அந்த இரண்டு வண்டிகளை சோதனையிட்டபோது அதில் செம்மரங்கள் இருந்ததை கண்டறிந்தனர். அதிர்ச்சியாகி, வாகனங்களை திருவலம் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். இரண்டு வண்டிகளில் இருந்த மொத்த செம்மரங்களின் எடை 800 கிலோ எனக்கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்து பாதுகாப்பாக வைத்த போலீஸார், வாகனங்கள் யாருடையது, அதில் பயணம் செய்தவர்கள் யார், யார் என தீவிரமாக விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.
பெரும் பாலும் பிரஸ் என ஸ்டிக்கர் ஓட்டிய எந்த வாகனத்தையும் காவல்துறையினர் சோதனையிடுவது இல்லை. இதனால் திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகும்பல், கட்டப்பஞ்சாயத்து கும்பல் போன்ற பலரும் வாகன தணிக்கையில் இருந்து தப்பிக்க பிரஸ் என்கிற வார்த்தையை தங்களது வாகனங்களில் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
தமிழக அரசு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கும் ஊடகம், பிரஸ் என்கிற ஸ்டிக்கர் ஓட்டிய வண்டிகளை தவிர மற்ற அனைத்து வண்டிகளையும் காவல்துறை பறிமுதல் செய்ய வேண்டும், சம்மந்தம்மில்லாதவர்கள் அந்த வார்த்தையை பயன்படுத்துபவர்கள் குறித்து வாகன சோதனையில் பிடிபடும்போது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கங்கள் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு தந்தனர். அவர்கள் அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் செம்மரம் வெட்டி கடத்தும் கார்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஓட்டியிருப்பது வேலூர் மாவட்ட செய்தியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.