“உன்ன நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டிடுவேன்..” என புகார் கொடுக்க வந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை, சாதியை வைத்து இழிவாகப் பேசிய பெண் போலீசின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இவர், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் பிண அறை பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கந்தன், பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் இருக்கிறார். தற்போதுதான் மகளுக்குத் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், கந்தனின் மகளுக்கும் அவருடைய கணவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கந்தன் தன் மகளை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளார். அந்த சமயம், காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் மகேஸ்வரி, புகார் அளிக்கச் சென்ற கந்தனை உள்ளே அனுமதிக்காமல் வாசலில் நிற்க வைத்துப் பேசியுள்ளார்.
அப்போது, உதவி ஆய்வாளர் மகேஸ்வரி பேசும்போது "இந்த வழக்க இந்த ஸ்டேஷன்ல எடுக்கமாட்டோம். நீ திருநெல்வேலி போலீஸ் ஸ்டேஷனுக்கு போ...” என, புகாரை தட்டிக் கழித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “வில்லங்கமா பேசுனா உன்னை நாய அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டி விட்ருவேன். நீ கோர்ட்டுக்கு போனா கூட உன்னால ஒன்னும் செய்ய முடியாது" எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த சூழலில், இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது மேலும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் கந்தனின் மகள் வாழ்க்கையை நாசமாக்கியதே உதவி ஆய்வாளர் மகேஸ்வரி தான் என்பதுபோல் பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி, கந்தன் குடும்பத்தினரை சாதிப் பெயரை வைத்து இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கந்தன் குடும்பத்தினரை, பட்டியலின சாதியை வைத்து இழிவாகப் பேசிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுவாக, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், தற்போது பூதாகரமாக வெடித்த இந்த சம்பவம், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.