கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய காவல் நிலையங்களில் ஒன்றான தக்கலை காவல் நிலையம் மாவட்டத்தின் முன் மாதிாி காவல் நிலையமாகும். காவல் நிலைய வளாகத்தை ஒட்டி நீதிமன்றம், தாலுகா அலுவலகம் மற்றும் சப்- ஜெயில் உள்ளது. மேலும் திருவனந்தபுரம் -கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த காவல் நிலையம் உள்ளது. இந்த நிலையில், நேற்று (10/12/2021) இந்த காவல்நிலையத்தில் இருந்து தான் குற்றங்கள் குறைவதற்காக காவல்துறையினர் காவடி எடுத்து வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி கோவிலுக்கு சென்ற நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிலையில் இன்று (11/12/2021) மதியம் 12.00 மணியளவில் தக்கலை காவல் நிலையத்தில் திடீரென்று பயங்கர வெடி சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. இதன் சத்தம் சுமாா் அரை கி.மீ தூரம் எதிரொலித்தது. இதனால் அக்கம் பக்கத்து கடைக்காரா்கள் மற்றும் ரோட்டில் நடந்து சென்ற மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் அருளப்பன் மற்றும் காவலர்கள், அதேபோல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் என காவல் நிலையத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். மேலும் காவல் நிலையத்தில் மேல் தளத்தில் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து கண்ணாடிகளும் உடைத்து சிதறியது. அதேபோல் மேல் தளத்தில் சுவர் உடைந்தது.
இதையடுத்து உடனடியாக தக்கலை தீயணைப்பு வீரர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறையினர், "காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து அனுமதியின்றி விற்பனை செய்து வந்த வெடி பொருட்கள், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி காவல் நிலையத்தின் மேல் தளத்தில் வைக்கபட்டிருந்தது. அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு திடீரென்று வெடித்து இருக்கிறது" என்றனர்.