தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு தளர்வு காலங்களில் கொண்டு வந்த கட்டுப்பாடு விதிமுறைகளை தமிழக அரசு நடைமுறையில் கொண்டுவந்துள்ளது.
இந்த நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11.04.2021) இரவு 10 மணியளவில் கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் அந்த கடைக்குள் சென்று, தனது லத்தியால் அங்குள்ள ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, கடையின் உரிமையாளர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகாரில் “அரசு 11 மணி வரை 50% இருக்கைகளுடன் ஹோட்டலை திறந்து வைத்திருக்கலாம் என தெரிவித்திருக்கிறது. இருந்தபோதிலும் காவல் உதவி ஆய்வாளர் கடைக்குள் புகுந்து 10.20 மணிக்கே கடையை மூட வலியுறுத்தி, லத்தியால் தாக்கியது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல் ஆணையர் இதனை விசாரித்து, புகாரில் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் முத்துவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.