மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா. இவருக்கு 41 வயதாகிறது. பிரபல ரவுடியான இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆரம்பத்தில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சத்யா காலப்போக்கில் முழுநேர ரவுடிசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் குற்ற சரித்திர பதிவேட்டில் முக்கிய ரவுடியாக வலம்வர தொடங்கிய சத்யா தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட ஏராளமான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அதன் நீட்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்யா தலைமையில் கோவையில் ஒரே நேரத்தில் 3 பேரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ரவுடி சீர்காழி சத்யா உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சத்யாவின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகமான சமயத்தில் போலீசார் அவரை ஒடுக்க முயற்சித்தனர். அப்போது, இதனைச் சுதாரித்துக் கொண்ட சத்யா கடந்த 2021ஆம் ஆண்டில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் வினோத் ஜி செல்வம் முன்னிலையில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். சீர்காழி சத்யா பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாலும் தனக்கு அரசியல் கட்சியின் செல்வாக்கு இருப்பதால் போலீசார் தன்னிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டார்.
இதற்கிடையில், தொழிலதிபரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் கூறி சீர்காழி சத்யா மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் சத்யாவை தீவிரமாகத் தேடி வந்தனர். காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சீர்காழி சத்யா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய போலீசார் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் வட நெம்மேலி செக் போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்துகொண்டிருந்த சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செங்கல்பட்டு அருகே பழவேழி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் போலீசார் சீர்காழி சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேலி மலைக்கு வந்தனர்.
அப்போது அந்த வாகனம் பழவேழி வழியாக சென்றுகொண்டிருந்தபோது சத்யா மற்றும் அவருடைய கூட்டாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்தனர். இதில் போலீசார் தங்களைத் தற்காத்து கொள்வதற்காக சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். குண்டு பாய்ந்ததில் இடது காலில் பலத்த காயமடைந்த சத்யா அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். தொடர்ந்து, சத்யாவிடம் இருந்து கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரவுடி சத்யாவின் வழக்கை விசாரிக்க கூடாது எனக் காவல்துறையினருக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.