Skip to main content

“போலீஸ் என் புடவையை உருவி அடிச்சாங்க..”;கதறும் தாய் - நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
police severely beaten the person who took him for questioning In Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவில் கடந்த 9 ஆம் தேதி முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்கி தங்க நகைகளை பறித்துக் கொண்டு செல்ல, அந்தச் சம்பவம் குறித்த புகார் மணமேல்குடி காவல் நிலையம் வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களே சில சந்தேக நபர்களையும் அடையாளம் சொல்ல போலிசார் விச்சூர் அருகே உள்ள அம்மாபட்டினம் அஞ்சல் ஆதிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் பாண்டியன் மற்றும் அவரது 17 வயது கூட்டாளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணையில் நகைகள் கிடைக்கவில்லை. 

சில நாட்கள் வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வீடும் திரும்பவில்லை. சிறைக்கும் அனுப்பவில்லை என்பதால் பாண்டியனின் தாயார் காளியம்மாள் மணமேல்குடி, மீமிசல் காவல் நிலையங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் அங்கே இல்லை என்று போலிசார் கூறியுள்ளனர். அதே நேரத்தில் திருட்டு போன நகை பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் அழைத்துச் சென்ற தன் மகனை காணவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியதுடன், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். மேலும், வட்ட சட்டப்பணிகள் குழுவிலும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில்.. கடந்த 18 ஆம் தேதி கொள்ளுவயல் ஆற்றுப்பாலம் அருகே, 1.150 கிலோ கிராம் கஞ்சாவுடன் பாண்டியன் வந்ததாக, கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ரேக்ளா பந்தயம் பார்க்கப் போன இடத்தில் பாண்டியனுக்கு காயமடைந்துள்ளதாக வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவச் சான்றும் பெற்று, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி உள்ளனர். நீதிமன்ற சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், புதுக்கோட்டை சிறை நிர்வாகம் காயத்துடன் உள்ளவரை சிறையில் வைக்க முடியாது என்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். மருத்துவமனையில் சேர்த்த பிறகு, மருத்துவர்கள் செய்த சோதனையில் பாண்டியனின் பின்புறம் இரு பக்கமும் பலத்த காயம் ஏற்பட்டு, இதனால் உப்பின் அளவு அதிகரித்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸ் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் தான் போலிசார் விசாரணை என்ற பெயரில் தன் மகனை உணவு, தண்ணீர் கொடுக்காமல் அடித்ததால் சிறுநீரகம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் என் மகன் உயிரைக் காப்பாற்ற உயர் சிகிச்சை அளிக்க வேண்டும், என்மகனை தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளிய போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வழக்கரிஞர் அலாவுதீன் மூலம் மனு கொடுத்தார். இது குறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் செய்தி மற்றும் வீடியோ வெளியான நிலையில், தீவிர சிகிச்சை தொடங்கி நடந்து வருகிறது. தற்போது நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் பாண்டியன் மற்றும் அவருக்குத் துணையாக உள்ள அவரது அம்மா காளியம்மாள் ஆகியோர் நம்மிடம் பேசினர். 

அந்தப் பேட்டியில் நம்மிடம் மருத்துவமனையில் இருந்தபடி பேசிய பாண்டியன், “சார் பச்சைத் தண்ணி கூட குடுக்காமல் அடிச்சாங்க சார்.. ஒரு இடத்துல தண்ணி ஊத்துவிட்டு அதாவது சாராயத்தை ஊத்திவிட்டு என்னை அடித்தார்கள்.. என அவர் கூறும்போது கண்களில் நீர் கோர்த்து முகம் ஆதங்கத்தில் கொப்பளித்தது. பாண்டியனின் அம்மா கூறும்போது, நகையை காணும் என போலீசார் என்னிடம் வந்து என் புடவையை உருவினார்கள். நகையை நான் மறைத்து வைத்துள்ளேன் எனச் சொல்லி என்னை அடித்தார்கள், என் மகனை திருட அனுப்பினேன் என ஏசினார்கள். என் மகனை நான் அப்படி வளர்க்கல ஐயா எனச் சொன்னேன். என் முகத்தில் காரி துப்பிவிட்டு சென்றார்கள். என்றார் வேதனை படிந்த குரலில். 

சாத்தன்குளம் போலவே புதுக்கோட்டை மணமேல்குடி சம்பவம் நடந்துள்ளதாகக் கூறும் மனித உரிமை ஆர்வலர்கள் உரிய விசாரணை வேண்டும் என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மருத்துவமனைக்கு வரும் பெண்களுக்குக் குறி; அத்துமீறும் செவிலியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
male nurse was involved in scamming women who came to the hospital

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ளது ஆலமரத்துப்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட பாப்பாரப்பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், ராணுவ வீரர் மனைவியைக் குழந்தைகளுடன் கடத்தியதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த அதியமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

39 வயதான அதியமான் கடத்தூா் அருகே உள்ள மடதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார். அப்போது, நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை அதியமான் குறிவைத்து பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளை மருத்துவமனையில் செய்து தனது செல்போன் எண்ணை கொடுத்து நெருங்கி பழகி வந்துள்ளார். எப்போது வேண்டும் என்றாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும் அழைக்கலாம் என்று நம்பிக்கையானவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார். இதனால், மருத்துவமனைக்கு வரும் பலருடன் அதியமானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட  அதியமான் நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கியுள்ளார். பின்னர், போலியாக பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுவரை இவரிடம் இராணுவ வீரரின் மனைவி, கணவனை இழந்தப் பெண் என மொத்தம் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வேலைக்காக கொடுத்து இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பலரிடம் அதியமான் கைவரிசை காட்டியிருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்களை மட்டும் குறிவைத்து பழகும் அதியமான் சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இப்படி, மோசடி பேர்வழியாக இருக்கும் அதியமானுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை திசை மாற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, அதன் மூலமும் தனியார் மருத்துவமனையில் அதியமான் கமிஷனை பெற்றதை அறிந்த போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி மன்னன் அதியமான் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் 25 லட்சத்திற்கு மேல் பணத்தை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மருத்துவமனைக்கு வரும் பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி மருத்துவமனை ஊழியா் ஒருவர் பண மோசடி, பாலியல் ஆத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
young man who married the girl

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது  சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.