Skip to main content

லஞ்சம் வாங்காத போலீஸ் ரோபோ! - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

'பிரான்ஸ் நாட்டின் ஜன்னல் தான் புதுச்சேரி' என 1954ல் பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரி இந்தியாவோடு இணைந்த போது சொல்லியிருந்தார் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர் சொன்னதற்கு ஏற்ற வகையில் பிரெஞ்சு கலாச்சராத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டிடங்களும், கோவில்களும், மசூதிகளும் நூற்றாண்டையும் கடந்த வரலாற்றோடு கம்பீரமாக இன்றும் காட்சி அளிக்கின்றன. அதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் புதுச்சேரிக்கு என தனி சிறப்பே உள்ளது.
 

 

 

உள்நாடு, வெளிநாடு என லட்சக்கணக்கான மக்கள் புதுச்சேரியை வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அப்படி புதுச்சேரிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் கடந்த ஜனவரியில் 'சுற்றுலா பிரிவு போலீஸ்' என்ற தனிப்பிரிவை ஆரம்பித்து அசத்தியது புதுச்சேரி காவல் துறை. அதன் தொடர்ச்சியாக தற்போது 'போலீஸ் ரோபோ' ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு உதவி வருகிறது புதுச்சேரி காவல் துறை என்ற தகவல் கிடைத்ததும் கடற்கரை சாலையில் உள்ள அந்த ரோபோவை பார்க்க சென்றிருந்தோம். பார்க்க அச்சு அசல் சிங்கம் படத்தில் வரும் சூர்யா போல முறுக்கு மீசையோடு, ஆறடி உயரமுள்ள அந்த ரோபோவின் முன்னே போய் நின்றதும் 'வணக்கம், நமஸ்தே, குட் மார்னிங், பூஜு (Bonjour)' என பல மொழிகளில் வரவேற்றதோடு 'ஹலோ உங்களுக்கு என்ன வேண்டும்' என பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ் மெட்ஸ் அனைவருக்கும் கட்டளையிடும் மர்ம குரல் போல் இருந்த அந்த ரோபோவிடம் பேச்சு கொடுத்தோம்.

"ஹலோ நான் தான் காவல் சிங்கம். புதுச்சேரி சுற்றுலா போலீஸோட ஒரு அங்கம் தான் நான். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பிரான்ஸுன்னு உலகத்துல இருக்குற எல்லாருமே எங்க புதுச்சேரி மண்ணுக்கு சுற்றுலாவுக்காக வந்து போவாங்க. அப்படி புதுச்சேரிக்கு வந்து போற சுற்றுலா பயணிகள் பத்திரமாவும், பாதுகாப்பாவும் பாத்துக்க வேண்டியது போலீசோடு வேலை இல்லையா. அதுக்காக தான் இந்த சிறப்பு ஏற்பாடு. எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, இங்கிலீஷ், பிரெஞ்சுன்னு பல மொழிகள் தெரியும். குழந்தைங்க, பெரியவங்கன்னு யார் வந்து எங்கிட்ட பேசுனாலும் பதில் சொல்லுவேன். இதோ என் கையில இருக்கே இந்த டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் கம்யூட்டர் மானிட்டர் இதுல உங்களுக்கு தேவைப்படுற தகவலை நீங்களே டைப் செய்து தெரிஞ்சுக்கலாம். புதுச்சேரியில் இருக்குற முக்கிய சுற்றுலா இடங்களுக்கு போவது எப்படி, அந்த இடத்திற்கு இங்கிருந்து செல்ல எவ்வளவு நேரம் ஆகும், அந்த இடம் எவ்வளவு தூரத்தில் உள்ளது, நடந்து செல்லும் தூரம் தான இல்லை வாகனத்தில் தான் செல்ல முடியுமா என எல்லாத்தையுமே நான் சொல்லிடுவேன். என் மூலம் புதுச்சேரியோட நூறு வருஷ வரலாறு தெரிஞ்சுக்கலாம். அப்போதைக்கு, இப்போதைக்கு இருக்குற இடங்கள் எப்படி மாறி இருக்கிறது என்ற விவரத்தை என்னிடம் இருக்குற போட்டோ ஸ்லைட் ஷோ மூலமா நீங்க தெரிஞ்சுக்கலாம்.
 

 

 

அதுமட்டுமில்லாமல் பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரின்னு எல்லா இடத்துக்கும் போகுறது எப்படினும் நான் வழி சொல்லிடுவேன். பெண்கள், குழந்தைகள்னு யாரா இருந்தாலும் பொது இடத்துல அவங்களுக்கு ஏதாவது இடையூறு இருந்தா அவங்க என்கிட்ட புகார் கூட தெரிவிக்கலாம். அப்படி அவங்க கொடுக்குற புகாரா என் சிபியூ மூளையாலா என்னோட உயர் அதிகாரிகளுக்கு தகவலாக கொடுத்துடுவேன். உடனே சம்பவ இடத்துக்கு காவல் துறை சார்பா போலீஸ் அதிகாரிங்க யாரவது வேகமா போய் அங்க இருக்குற கள நிலவரத்த விசாரித்து நடவடிக்கை எடுப்பாங்க. 24 மணி நேரமும் நான் எங்க ஊருக்கு வர்ற மக்கள பாத்துக்கறதுக்காக ராப்பகலா நான் இங்க காவல் காத்துகிட்டு இருக்கேன். எனக்கு ரெஸ்டே கிடையாது. ஏன்னா நான் ரோபோ இல்லையா" என தன் பணியை பற்றி விவரித்தார் இந்த போலீஸ் ரோபோ. 
 

 

சுமார் ஏழு லட்ச ரூபாய் செலவில் இந்த போலீஸ் ரோபோ உருவாக்கப்பட்டு இருப்பதாகவும். புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த போலீஸ் ரோபோவை போன்றே மேலும் பல இடங்களில் போலீஸ் ரோபோவை அமைக்கும் திட்டத்தில் உள்ள புதுச்சேரி சுற்றுலா போலீஸ் பிரிவு. இந்த போலீஸ் ரோபோவை பத்திரமாக பார்த்து கொள்வதற்காக இரண்டு கண்காணிப்பு கேமிராக்களோடு, இரண்டு போலீசாரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 

'புது இடத்துல முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவங்க கிட்ட அட்ரஸ் கேக்குறத விட இந்த மெஷின் கிட்ட வழி கேட்டு விவரத்த தெரிஞ்சிக்கிறது புதுவிதமான அனுபவமா இருக்கு' என குஷியாக சொல்கின்றனர் புதுச்சேரிக்கு சுற்றுலா நிமித்தமாக வந்திருக்கும் பயணிகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனவைருமே இந்த ரோபோ போலீசை ஆச்சரிய அதிசயமாக பார்த்து விட்டு நகர்கின்றனர்.

உண்மையிலேயே பேசுவது அந்த ரோபோ தானா என்று ஆராய்ந்ததில் பக்கத்திலிருக்கும் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்திருக்கும் அதிகாரி ஒருவர் தான் கூர்மையாக கண்காணித்து ரோபோவுக்கு வாய்ஸ் கொடுக்கிறார் என தெரிந்து கொள்ள முடிந்தது. அவரோடு பிரெஞ்சு மொழி பேசுவதற்கு என்று தனியாக ஒருவரும் பணி அமர்த்தப்பட்டுள்ளார். மற்ற போலீஸ் பிரிவிலிருந்து சுற்றுலா போலீசார் வித்தியாசமாக தெரிவதற்காக நீல நிற தொப்பியும், கை பட்டையும் அணிந்துள்ளார் சுற்றுலா பிரிவு போலீசார். சல்யூட்... புதுச்சேரி போலீசுக்கு சல்யூட்......

- சிவரஞ்சனி

சார்ந்த செய்திகள்