இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு துருக்கி மற்றும் எகிப்து நாடுகளிடம் இருந்து சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி எகிப்து வெங்காயம் தமிழகம் வந்தடைந்து. அதன்பிறகு சென்னை கோயம்பேடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எகிப்து வெங்காயம் அனுப்பப்பட்டது. ஆனால் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கும் நல்லது. எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வரே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார். தமிழகத்திலேயே அடுத்த வாரம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. வெங்காய வரத்து அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும்" என்றார்.