மருத்துவமனையில் தாயிடம் இருந்து மாயமான முதல் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 24 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்கிற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ருக்மணி தனது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது மூத்த மகன் சித்தார்த்தும் உடனிருந்தார்.
இதையடுத்து மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ருக்மணிக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயம், குழந்தை பிறந்த செய்தியறிந்த பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைத்த நேரத்தில் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மூத்த மகன் சித்தார்த் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு மகன் சித்தார்த்தை மருத்துவமனை முழுவதுமாக தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் ஸ்ரீதர் என்பவர் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த சித்தார்த்திடம் பேச்சு கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாததால் அச்சிறுவனுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மகப்பேறு வார்டில் இருந்த தனது தாயை அடையாளம் காட்டிய பிறகு அச்சிறுவன் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாயமான சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த காவலரை மருத்துவமனையில் இருந்த அனைவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் அங்கிருந்தவர்களிடமும் அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.