வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது கார்க்கூர் கிராமம். இங்கு இயங்கி வரும் பாலாறு வேளாண்மை கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிரிஷின் நகரை சேர்ந்த ரவி எலக்ட்ரிஷியன் என்பவர் இளைய மகன் பிரதாப் (18) என்பவர் முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 10-ந் தேதி அரக்கோணம் சென்று தனது வீட்டில் பெற்றோரை பார்த்து விட்டு மீண்டும் பிப்-12ஆம் தேதி திங்கள் கிழமையன்று கல்லூரிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை சுமார் 6.00 மணியளவில் கல்லூரி ஹாஸ்டல் வார்டனிடம் ஜெராக்ஸ் எடுக்க அருகிலுள்ள மேல்பட்டி கிராமத்திற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காலை 7.00 மணியளவில் மேல்பட்டி ரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் காட்பாடி செல்லும் ரயில் மார்க்கம் பகுதியில் இருப்பு பாதையில் மாணவன் பிரதாப் தலை மற்றும் முகத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்ததை பார்த்த ரயில்வே பணியாளர்கள் மேல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மேல் பட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த மாணவன் பிரதாப்பை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரழந்தார். பாலாறு வேளாண்மைக் கல்லூரி, முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி வீரமணிக்குச் சொந்தமானது. இந்த கல்லூரி மாணவர்தான் இறந்துள்ளார், இது கொலையா? தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்த வேண்டிய போலீசார் இதில் மெத்தனமாக விசாரணை நடத்துகின்றனர். இது முன்னாள் அமைச்சரின் கல்லூரி என்பதால் அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி நடப்பதாக இறந்த மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.