பெரியார் பல்கலையில் துணைவேந்தர் உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து தொடங்கிய தனியார் நிறுவனம் தொடர்பான முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஸ், பாரதிதாசன் பல்கலை கல்வியியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தன்னிச்சையாக பியூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில், பல்கலையின் முகவரியில் அதே வளாகத்தில் தனியார் நிறுவனத்தைத் தொடங்கினர். இதனால் அவர்கள் சொந்த ஆதாயம் அடைவதாகவும், அரசு நிதியைக் கையாடல் செய்துள்ளதாகவும் பெரியார் பல்கலை தொழிலாளர்கள் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர், துணைவேந்தரை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக பல்கலைக்குச் சென்றபோது அவரை துணைவேந்தர், சாதி பெயரைச் சொல்லியும், கொலை மிரட்டலும் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சாதி வன்கொடுமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, நிரந்தர பொறுப்பு பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஸ், ராம் கணேஷ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
தனக்கு உடல்நலம் சரியில்லை என்று துணைவேந்தர் தரப்பில் வாதிட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட மறுநாளே அதிகாலையில் அவர் நிபந்தனை பிணையின்பேரில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள், பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவருடைய வீடு, பதிவாளர் அலுவலகம், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட 7 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். 22 மணிநேரம் நடந்த சோதனையில் பெட்டி பெட்டியாக முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.
இந்நிலையில், ஜன. 11ம் தேதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர் ஜெகநாதனை பெரியார் பல்கலைக்கு நேரில் வந்து சந்தித்துப் பேசினார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றும் சாதி வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட ஜெகநாதனை ஆளுநர் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆளுநர் வருகையின்போதே, சேலம் மாநகர காவல்துறையினர் பல்கலை வளாகத்தில் உள்ள பியூட்டர் பவுண்டேஷன் நிறுவன அலுவலகம், பயணியர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். பியூட்டர் பவுண்டேஷனில் இயக்குநர்களாக உள்ள நான்கு பேரின் பின்னணி விவரங்கள், அவர்களின் பங்குத்தொகை முதலீடு, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததற்கான கோப்புகள் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்தனர்.
பியூட்டர் பவுண்டேஷனில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வனிதா, மாணவர் பயன்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. மத்திய அரசின் இளைஞர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதியில் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்ட புகார் குறித்தும் காவல்துறையினர் விசாரித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தலைமறைவாக உள்ள நிரந்தர பொறுப்பு பதிவாளர் தங்கவேல், பேராரிசியர்கள் சதீஸ், ராம் கணேஷ் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.