Skip to main content

செம்மரக் கடத்தலைத் தடுத்த போலீஸ் கொலை; குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Police prevent incident Surrender to the  court

ஆந்திரா மாநிலம் அண்ணமய மாவட்டம் கே.வி. பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட குன்றோவாரி பள்ளி சந்திப்பு அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர்கள் வழக்கம் போல் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட செம்மரக்கடத்தல் கும்பல் ஒன்று கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வேகமாக வந்துள்ளது. இந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர் பி. கணேஷ் (வயது 30) என்பவர் மீது மோதிவிட்டு வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தில் காவலர் கணேஷ் (வயது 30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த கடத்தல்காரர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இருவரை பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரில் இருந்த 7 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பிச் சென்ற  கடத்தல்காரரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

செம்மரக்கடத்தலைத் தடுப்பதற்காக சென்ற போலீஸ் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் அவர் பலியான நிகழ்வு ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், செம்மரக் கடத்தலைத் தடுத்த போலீசை கார் ஏற்றிக்கொண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ராமன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். 

சார்ந்த செய்திகள்