விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்பட அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கறவை மாடுகள் அடிக்கடி திருடு போவதாக திண்டிவனம் உரோசனை, ஒலக்கூர் ஆகிய காவல்நிலையங்களில் அப்பகுதி மக்கள் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டு மாடுகளை திருடி சென்ற திருடர்கள் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி கணேசன் மேற்பார்வையில் திண்டிவனம் காவல் ஆய்வாளர் மூர்த்தி தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.vill
இந்த நிலையில் நேற்று காலை மரக்காணம் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த 2 டாட்டா ஏசி வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். மாடு ஏற்றிவந்த வாகன ஓட்டிகள் முன்னுக்கு பின் முறனாக பதிலளித்துள்ளனர். வாகனங்களில் இருந்த மாடுகளுடன் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் தனித்தனியாக தங்கள் பாணியில் விசாரணை செய்துள்ளனர். அதில் திண்டிவனம், உரோசனை, ஒலக்கூர் ஆகிய கிராமப்பகுதிகளில் கறவை மாடுகளை திருடியவர்கள் தாங்கள் தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் பிடிபட்ட மாடு திருடர்கள் விழுப்புரம் அருகில் உள்ள பஞ்சமாதேவி உப்பு முத்தால் பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ் ராஜ், திருமூர்த்தி, ஆனந்தபாபு, சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்த அஜித் குமார், மணிகண்டன், விழுப்புரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த ஐயனார் ஆகிய ஆறு பேர்களையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 12 கறவை மாடுகளையும் மாடு கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டாட்டா ஏசி வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கிராமப்புறங்களில் தொடர்ந்து மாடு திருடிய திருடர்கள் பிடிபட்டதையடுத்து களவுபோன மாடுகளின் உரிமையாளர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.