கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ம் தேதி திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள முக்கொம்பு சுற்றுலாத்தலத்திற்கு தன்னுடைய காதலனோடு வந்த சிறுமி ஒருவரிடம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு போலீஸார் அத்துமீற முயன்றதாக, அந்தச் சிறுமியும், அவரின் காதலரும் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவம்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி ரோந்து எண் 6-ல் பணிபுரியும் முதல்நிலைக் காவலரான சங்கர் ராஜாபாண்டியன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேர் மீதும் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போக்சோவில் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருச்சி மாவட்ட எஸ்.பி அமைக்கும் தனிப்படை குழுவின் மூலம் நண்பர்களாகியிருக்கின்றனர். அதன்பிறகுதான், இவர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்டியுள்ளனர். இவர்கள் அடிக்கடி இணைந்து வெளியே சென்று மது அருந்திவிட்டு, கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதேபோல்தான் அக்.4ம் தேதி முக்கொம்புக்கு நான்கு பேரும் அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியோ, விடுப்போ எடுக்காமலும், உயரதிகாரிகளுக்கு எவ்விதத் தகவலும் சொல்லாமலும் சிவப்பு கலர் காரில் சாதாரண உடையில் அங்குச் சென்றிருக்கின்றனர்.
பிறகு அங்கேயே அமர்ந்து மது அருந்திவிட்டு, காவிரி ஆற்றில் குளித்துவிட்டு மதுபோதையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து இருந்த இரண்டு காதல் ஜோடிகளை அழைத்து மிரட்டியுள்ளனர். அதில், ஒரு காதல் ஜோடி தப்பித்து ஓடிவிட்டது. மற்றொரு ஜோடியான 17 வயது சிறுமி, அவரின் காதலரான 19 வயது இளைஞர் ஆகியோரை மிரட்டி, அடித்து, 'கஞ்சா விற்பனை செய்கிறீர்களா... உன்னை விசாரணை செய்ய வேண்டும்' என்று கூறி, அந்த இளைஞரை விரட்டி அனுப்பியிருக்கின்றனர்.
அதன் பிறகு, அந்தச் சிறுமியை மாலை 5 மணியளவில் வலுக்கட்டாயமாக மிரட்டி, காரில் ஏற்றியிருக்கின்றனர். மதுபோதையில் அந்தச் சிறுமியிடம் அவரின் உடலைத் தொட்டு மிரட்டிப் பேசி, அவரின் செல் எண்ணைப் பெற்றிருக்கின்றனர். 'எப்போது அழைத்தாலும் போன் பேச வேண்டும், கூப்பிடும் இடத்துக்கு வரவேண்டும்' என்று மிரட்டியிருக்கின்றனர். மேலும், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டு வீடியோ பதிவும் செய்திருக்கின்றனர். பின்பு, மாலை 6 மணிக்குமேல் அந்தச் சிறுமி சத்தம் போடவும், அவரை காரைவிட்டு கீழே இறக்கிவிட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அந்த சிறுமியும், அவருடைய காதலரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ உள்பட 4 பேர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் 4 பேரையும் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் பணியிடை நீக்கம் செய்துள்ளார். தற்போது அவர்கள் சிறையில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கை விசாரிக்க, திருச்சி மண்டல டிஐஜி, பொருளாதார குற்றவியல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரனை விசாரணை அதிகாரியாக நியமித்தார். ஆனால், அவர் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், வேறு ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, டிஐஜி ஏற்கவில்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்காகவும் இந்த வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ஜமீல், அரசு விசாரணை அதிகாரி சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என கூறியனார்.
இந்த நிலையில், அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, இது ஒரு சீரியசான கேஸ்.. இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மனுதாரர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் கொடூரமானது. அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவிக்கும்பட்சத்தில், ஏன் வேறு ஒரு விசாரணை அதிகாரியை நியமிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியதோடு, வேறு ஒரு அதிகாரியை நியமிக்கவும், முதலில் இருந்து விசாரணை நடத்தத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். விடுபட்ட இடத்தில் இருந்து நடத்தை விதிமுறைகளின்படி தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் டிஐஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. கோடிலிங்கத்தை டி.ஐ.ஜி நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய அதிகாரி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், காவலர்கள் 4 பேரும் செய்த அட்டகாசங்கள், அத்துமீறல்கள், பல பெண்களுடன் அவர்கள் போட்ட ஆட்டம் என அனைத்து வீடியோக்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும் இந்த காவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணையைத் துவக்கியுள்ளார். விரைவில் பாதிக்கப்பட்ட பெண்களின் அறிக்கையையும் காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.