திருச்சி சிறையில் வார்டனராக இருந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்வதற்கு காரணமாக சிறையில் உள்ள வார்டன் தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தற்போது வரை போலிஸ் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருப்பதால் இவர்களை பிடிக்க தனிப்படை நியமித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் செந்தமிழ்செல்வி (23). திருச்சி காந்தி மார்க்கெட் மகளிர் தனி கிளை சிறையில் 2ம் நிலை வார்டன். சுப்ரமணியபுரம் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கே.கே.நகர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தமிழ்செல்விக்கு பயிற்சியின்போது அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த வெற்றிவேல் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். வெற்றிவேல் திருச்சி மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். இதற்கு இடையில் வெற்றிவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு தயார் ஆகி வருவதும். அதற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் வெற்றிவேல் - செந்தமிழ் செல்வி இருவரின் காதல் விவகாரம் தெரிந்து அதே சிறையில் வார்டனாக உள்ள வெற்றிவேலின் அண்ணன் கைலாஷ் மற்றும் அவரது மனைவி மகளிர் சிறை வார்டன் ராஜசுந்தரி ஆகியோர் செந்தமிழ்செல்வியை கண்டித்தனர். இதில் பிப்ரவரி 2ம் தேதி பணியில் இருந்த செந்தமிழ்செல்வியை அழைத்து ஜாதி பெயரை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவனுக்கு அடுத்த வாரம் வேற ஒரு இடத்தில் திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது. ஏதாவது பிரச்சனை பண்ணினால் நடப்பதே வேறு என்று மிரட்டியிருக்கிறார். இவர்களின் மிரட்டால் மனவேதனை அடைந்த செந்தமிழ்செல்வி,
அடுத்த நாள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தந்தை புகாரை அடுத்து சிறை வார்டன்கள் கைலாஷ், அவரது மனைவி ராஜசுந்தரி, காதலன் வெற்றிவேல் ஆகிய 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
போலீசார் வழக்கு பதிந்தது குறித்து அறிந்த 3 பேரும் தலைமறைவாகினர். இந்நிலையில் சொந்த ஊர் அருகே நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த காதலன் வெற்றிவேலை தனிப்படை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பிப்ரவரி 5ம் தேதி கைது செய்து 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அண்ணன் கைலாஷ், இவரது மனைவி ராஜசுந்தரி தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையில் காதலன் வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு முருகேசன் 7ம் தேதி உத்தரவிட்டார். அண்ணன் கைலாஷ், அண்ணி ராஜசுந்தரி இருவரையும் சமீபத்தில் சிறை சூப்பிரண்டு முருகேசன் சஸ்பெண்ட் உத்தரவிட்டார். ஆனாலும் தனிப்படை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
தற்கொலை செய்து இறந்த தலித் சமூகத்தை சேர்ந்த சிறைவார்டன் செந்தமிழ்செல்வி குடும்பத்திற்கு அரசாங்க தரப்பில் இருந்து கொடுக்க வேண்டிய எந்த நிதி உதவியும் இன்னும் கிடைக்கவில்லை என முதல்வருக்கும், மனு அனுப்பி உள்ளனர். உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளனர்.