
சென்னையில் துப்பாக்கி முனையில் தொப்பை கணேசன் என்ற ரவுடியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரபல தாதாவான டான் சேராவின் கூட்டாளிகளில் மிக முக்கியமான ரவுடியாக இருந்தவர் தொப்பை கணேசன். சுமார் 15-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் தொப்பை கணேசன் மீது உள்ளது. இதனால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொப்பை கணேசனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடத்திற்கு பின்பு வெளியில் வந்த தொப்பை கணேசன் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் புளியந்தோப்பு துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். நேற்று ரவுடி ஹரி என்கிற அறிவழகனை போலீசாரிடம் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பிடித்திருந்தனர். தொப்பை கணேசனின் ரவுடி கும்பலில் அறிவழகனும் ஒருவர் என்பது தெரியவர, ஹரி கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தொப்பை கணேசனை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டு சூழ்ச்சி சுரேஷ் என்ற ரவுடியின் தரப்பில் பலரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி வருவதாக தொப்பை கணேசன் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் இந்த கைது நடந்துள்ளது. தொப்பை கணேசனின் கூட்டாளிகள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.