சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பைபாஸ் மேம்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் வேலு (வயது 41). இவர் கண்டெய்னர் லாரியில் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள வாத்தலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர்த் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்து சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாற்று கண்டெய்னர் லாரியை வரவழைத்து உணவுப் பொருள்களை வேறு லாரியில் மாற்றி எடுத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை குறுகலாகவும் வளைவுகள் அதிகமாகவும் உள்ளதால் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.