தேசிய புலனாய்வு மையத்தின் (என்,ஐ,ஏ)அதிரடி சோதனைக்கு இடையில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வை தொடங்கியிருப்பது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில வாரங்களாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் என்,ஐ,ஏ குழுவினர் சோதனை நடத்தியும் பலரை கைது செய்தும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்திற்கு அதிவிரைவு படையினரின் குழுவினரின் வருகை பொதுமக்களை முனுமுனுக்கவைத்துள்ளது.
மத்திய அதிவிரைவு படையின் துணை கமாண்டோ சிங்காரவேல் தலைமையிலான 46 பேர் கொண்ட குழுவினர் நேற்று நாகை வந்தனர். அந்த குழு நாகை எஸ்,பி ராஜசேகரனை சந்தித்து, அப்போது நாகை மாவட்டத்தில் மதக்கலவரம், சாதி மோதல்கள், இயற்கை சீற்றங்கள் ஏற்படும் இடங்கள், பொது மக்கள் அதிக அளவில் கூடும் வழிபாட்டுத்தலங்கள், மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த பகுதிகள், அதனை உள்ளடக்கிய காவல் நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தனர்.
பின்னர் நாகை நகர போலீஸ் ஸ்டேஷன், நாகூர் போலீஸ் ஸ்டேஷன், ஆகியவற்றிற்கு சென்று அதிரடி காட்டியதோடு அங்குள்ள குற்றதகவல்கள், மத, சாதிய ரீதியான அசம்பாவித சம்பவங்கள், மிகப்பெரிய அளவிலான கலவரங்களின் தகவல்கள், காவல் நிலைய எல்லையில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த திருவிழாக்கள், அன்றைய தினம் பொதுமக்கள் வருகைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து அதிவிரைவு படை அதிகாரிகள் கூறுகையில்," தமிழகத்தில் பதட்டமான பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பதற்றமான சூழலுக்கு என்ன காரணம், யார் அதற்குப் பொறுப்பு என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அவ்வாறு ஆய்வின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை எப்படி தடுப்பது, அசம்பாவிதம் நடைபெறும் இடத்திற்கு அதிவிரைவுப்படை இருக்கும் இடத்திற்கும் எவ்வளவு தூரம் உள்ளது, எவ்வளவு மணி நேரத்தில் அல்லது எத்தனை நாட்களில் வந்து சேர முடியும், என்பது குறித்தான அனைத்து தகவல்களையும் சேகரித்து பதிவு செய்து கொள்ளப்படும். கலவரம் நடந்தால் அதை அடக்க எந்த உத்தியை பயன்படுத்தலாம், என்பது குறித்தும் பதிவு செய்யப்படும், இதன்படி நாகை மாவட்டத்தில் முதல் கட்டமாக நேற்று ஒரு சில போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆய்வு நடத்தி உள்ளோம். தொடர்ந்து இந்த ஆய்வு நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாங்கண்ணி மயிலாடுதுறை வேதாரன்யம் செம்பனார் கோவில்,சீர்காழி உள்ளிட்ட 10 இடங்களுக்குச்சென்று ஆய்வு செய்ய உள்ளோம்," என்றார்.
இது குறித்து காக்கிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்," சமீப காலமாக நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் பதட்டமாகவே இருக்கிறது, தண்ணீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, மத பிரச்சனை, தற்போது தீவிரவாத அமைப்போடு தொடர்பில் இருப்பதாக சிலர் கைதாகியிருக்கும் பிரச்சனை, இதையெல்லாம் தாண்டி மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்காக தினசரி ஏதாவது ஒரு இடத்தில் நடக்கும் போராட்டம் என பதட்டத்திலேயே இருக்கிறது, இதனை களைய, போராட்டக்காரர்களை அச்சுறுத்தவும், போராட்டக்காரர்களை பயமுறுத்தவுமே இந்த சோதனை." என்கிறார்.