கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக 365வது நாள் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பங்கெடுத்துக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஆண்டு மே19ம் தேதி ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு எதிராகவும், அதன் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் நஞ்சாவதாகவும், எண்ணெய் கசிவு எற்பட்டு விளைநிலங்கங்கள் பாலைவனமாவதாகவும் கூறி போராட்டத்தை தொடங்கினர்.
பிறகு மே 30ம் தேதி ஸ்ரீராம் என்பவரது நிலத்தில் எண்ணெய் உடைப்பு ஏற்பட்டு தீப்பிடித்ததன் காரணமாக கிராமமக்கள் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தி மக்களை ஓட ஓட விரட்டினர். அதோடு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து இந்த பகுதியில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக வெளியேற வேண்டும், காவிரி பாசன பகுதியை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தின் 365வது நாளான இன்றைய போராட்டத்தில் போராட்ட குழு தலைவர் ஜெயராமன், இயக்குனர் கௌதமன், மருத்துவர் பாரதிசெல்வன் உள்ளிட்டோரும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விவசாய அமைப்பினரும் பங்கேற்றனர். நாள் முழுவதும் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை அடுத்து கதிராமங்கலம் கிராமம் மற்றும் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணற்றிற்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கிராம மக்கள் சிறுவர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். தாய்மார்கள் போராட்டக் களத்திலேயே தொட்டில் கட்டி குழந்தைகளை தூங்கவைத்தனர்.
மன் சார்ந்த கிராமிய பாடல்கள் முழங்கப்பட்டன, புத்தர் கலைக்குழுவினர் பறையிசை நடத்தி போராட்டத்தினரை சிந்திக்க வைத்தனர். போராட்ட களத்திலேயே மதிய உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கினர்.
போராட்ட ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், ஓராண்டாக ஓ.என்.ஜி.சிக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் அரசு சற்றும் செவிக்கொடுக்காமல், மாற்றுவழியை தேடுகிறது. ஒ.என்.ஜி.சி நிறந்தரமாக வெளியேற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும்." என்றார்.