ஆக்ரமிப்பு அகற்றத்தின் போது, வருவாய் ஊழியர்கள், காவல்துறை டி.எஸ்.பி. மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே உதவி ஆட்சியரை ஒருமையில் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ரவண சமுத்தித்திரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் செய்து வந்தனர். இவர்களுக்கு உறுதுணையாக அம்பை சரக துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
அப்போது அங்கு வருகை தந்த ஆலங்குளம் அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வந்த வேகத்திலேயே, "சார் உடனே ஆக்ரமிப்பு அகற்றுவதை நிறுத்துங்க. பெரிய இவன் மாதிரி பேசாதீங்க. அத்தனை பேரும் உங்க பெயரை எழுதி வைத்துவிட்டு செத்துபோயிருவாங்க. ஆறடிக்கு மேல் தொட்டாச்சுன்னா (ஆக்கிரமிப்பு 12அடி உள்ளது) இரண்டு பேர் சாவுவாங்க என்று நினைச்சுகோங்க எங்களை என்ன பைத்தியகாரங்கனு நினைச்சிங்களா? நீங்க இன்றைக்கு போய்ருவீங்க உங்களுக்கு ஆறுமாதமோ அல்லது மூன்று மாதமோ. இதை விட்டுட்டுப் போகலைன்னா பஸ் மறியல் செய்து சி.எம். வரை பிரசர் கொடுப்பேன். சட்டப்படி தான் செய்வேன்னா கேரளாவில் போய் செய்யுங்க. (உதவி ஆட்சியர் ஆகாஷ் கேரளாவை சேர்ந்தவர்) ஜேசிபியை தூர எடுத்துட்டுப்போ. இல்லண்ணா அவ்வுளதான்." என அனைவரின் முன்னிலையிலும் மிரட்டல் விடுக்க ஆடிப் போனார் உதவி ஆட்சியர் ஆகாஷ்.
"உதவி ஆட்சியர் தான் மிரட்டபடும் செயலை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு கண்டும் காணாதுமாய் நகர்ந்துவிடுகிறார். டி.எஸ்.பி.யோ நமெக்கெதுக்கு வம்பு? என நின்றார். நேர்மையாக செயல்பட்டன ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீ.ஜி.ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும்" என இளையபாரதம் உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாவட்டத்தில் பதட்டம் நிலவி வருகின்றது.