திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கிலியாண்டபுரம் சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ஒரு மாருதி ஸ்விப்ட் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பெரிய மூட்டையுடன் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவை ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதில் நாகராஜ் (20),வெற்றி (20), தயாநிதி (22), முகமது அப்துல் ரகுமான் (22), நோபில் என்கிற இக்னேசியஸ் (20), ஹரிகரன் (25) ஆகிய 6 இளைஞர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 22 கிலோ கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இளைஞர்களிடம் இருந்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.